பாகிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் தொடர் குறித்து வெளியான தகவல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அடுத்த ஜனவரியில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிக்காக இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக இரு நாடுகளின் கிரிக்கெட் சபைகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்கமைய, ஜனவரி 8, 10 மற்றும் 12 ஆகிய திகதிகளில் கொழும்பில் போட்டியை நடத்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான தயார்படுத்தல் போட்டிகளாக இது அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்பு, இலங்கை அணி நவம்பரில் பாகிஸ்தானில் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன் பிறகு, ஆப்கானிஸ்தானுடன் ஒரு முத்தரப்பு போட்டியும் திட்டமிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்து வரும் மோதல் காரணமாக, இந்த முத்தரப்பு போட்டியை நடத்துவது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பாகிஸ்தான் தொடர் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், மைதானங்களின் கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் இந்த திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அரசியல் பிரச்சினைகள் காரணமாக பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது.
எனவே டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.