கொழும்பில் ஆபத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்
கொழும்பு மாவட்டம் உட்பட பல பிரதேசங்களில் ஆபத்தான நிலையில் கட்டடங்களுடன் கூடிய பாடசாலைகள் இருப்பதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சில கட்டடங்கள் ஆபத்தான நிலையில் தற்போது கணிசமான காலமாக இருப்பதாகவும் ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சிறுவர்களின் கல்வி மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்தையும் பொறுப்பையும் செலுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கருத்து வெளியிட்டுள்ளது.
பாடசாலை பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு போதிய ஒதுக்கீடு வழங்கப்படாத காரணத்தினால் பல பாடசாலை கட்டிடங்கள் மற்றும் இடங்கள் இன்னும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக அதன் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் போதிய வசதிகள் இல்லாததால், பாடசாலைகளில் குழந்தைகள் விபத்துக்குள்ளாவதை தடுக்க அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் தலையீடு இன்மையால் பல பாடசாலைகளின் பராமரிப்புப் பணிகள் பெற்றோருக்கு சுமையாக உள்ளது.
ஆபத்தான நிலையில் கட்டடங்களைக் கொண்ட 74 பாடசாலைகள் மீது ஏற்கனவே தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.
அவற்றின் திருத்தப்பணிகள் முடிந்தவரை சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.