INDvsAFG – இந்திய அணிக்கு 159 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த அணியில் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பெறவில்லை.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய குர்பாஸ், இப்ராஹிம் ஜட்ரன் ஆகியோரால் விரைவாக ரன்கள் சேர்க்க முடியவில்லை. ஆனால் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.
8-வது ஓவரின் கடைசி பந்தில்தான் ஆப்கானிஸ்தான் முதல் விக்கெட்டை இழந்தது. 50 ரன்கள் எடுத்திருக்கும்போது குர்பாஸ் 28 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
குர்பாஸ் ஆட்டமிழந்த உடனேயே ஜட்ரனும் ஆட்டமிழந்தார். 9-வது ஓவர் 2-வது பந்தில் 25 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் வந்த ரஹ்மத் ஷா 3 ரன்னில் வெளியேறினார். இதனால் ஆப்கானிஸ்தான் விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு உமர்ஜாய் உடன் முகமது நபி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினர். இதனால் ஆப்கானிஸ்தான் ஸ்கோர் 150 ரன்னை நோக்கி சென்றது.
உமர்ஜாய் 22 பந்தில் 29 ரன்கள் எடுத்தும், முகமது நபி 27 பந்தில் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 19-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரில் ஆப்கானிஸ்தான் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் சேர்த்தது.
கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் 3 பவுண்டரியுடன் 15 ரன்கள் விளாச மொத்தமாக ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது.
நஜிபுல்லா ஜட்ரன் 11 பந்தில் 19 ரன்களும், கரிம் ஜனத் 5 பந்தில் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முகேஷ் குமார், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.