11 ஆண்டுகளுக்குப் பிறகு மிக மோசமான சாதனைகளை பதிவு செய்த இந்திய அணி

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 669 ரன்களை குவித்துள்ளது. இதன்மூலம், 11 ஆண்டுகளுக்குப் பிறகு, 600 ரன்களுக்கு அதிகமான ரன்களை இந்திய அணி வாரி வழங்கியுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில், கடந்த 23ம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் மான்செஸ்டரில் உள்ள மைதானத்தில் தொடங்கியது.
இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி 358 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் (61), ஜெய்ஸ்வால் (58), பன்ட்(51) ஆகியோர் அரைசதம் அடித்து அணியின் ரன் குவிப்புக்கு கைகொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, பேட் செய்த இங்கிலாந்து அணி, ஒருநாள் கிரிக்கெட் போன்று ஓவருக்கு ஓவர் ரன்களை குவித்தது. இதனால், க்ராலி (84), டக்கெட் (94), போப் (71) ஆகியோர் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டனர். சிறப்பாக ஆடி சதம் அடித்த ஜோ ரூட் 150 ரன்களில் அவுட்டானார். நேற்று 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 544 ரன்கள் சேர்த்திருந்தது.
இந்த நிலையில், 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டோக்ஸ் சதம் அடித்தார். இது அவரது 14வது சதமாகும். இறுதியில் இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், பும்ரா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளும், கம்போஜ், சிராஜ் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு, ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகியோர் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.
இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது; இதன்மூலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு 600 ரன்களுக்கு அதிகமான ரன்களை இந்தியா வாரி வழங்கியுள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர பவுலரான பும்ரா, 112 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் தற்போது வரை 48 டெஸ்ட்டில் (91 இன்னிங்ஸ்)விளையாடியுள்ள பும்ரா, முதல்முறையாக 100 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார்.