மகளை கடைக்கு அழைத்துச் சென்றுக்கு சர்ச்சையில் சிக்கிய இந்திய வீரர் முகமது ஷமி
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரராக இருப்பவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஷமி. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப்போட்டிவரை கொண்டுசென்றவர். இந்தத் தொடரில் இவருடைய பங்களிப்பு பெரிதாகப் பேசப்பட்டது. முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவைசிகிச்சை செய்துகொண்டபின் ஓய்வில் இருந்த அவர், தற்போது பந்துவீச்சு பயிற்சியை தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் விரைவில், இந்திய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஷமி தன் மகளுடன் நீண்டநாட்களுக்குப் பிறகு ஷாப்பிங் சென்ற வீடியோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இணையத்தில் வைரலான அந்த வீடியோவில் ஷமியும் அவரது மகள் ஆயிராவும் இணைந்து ஷாப்பிங் செய்தனர். இந்த வீடியோவைப் பகிர்ந்த ஷமி, “நீண்ட நாட்களுக்குப் பிறகு என் மகளை மீண்டும் பார்த்தபோது என்னுடைய நேரம் உறைந்துவிட்டது. வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு உன்னை நேசிக்கிறேன் மகளே…” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், முகமது ஷமியிடமிருந்து விவாகரத்து பெற்ற அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் எதிர்வினையாற்றியுள்ளார். இதுகுறித்து அவர், ”சும்மா விளம்பரத்திற்காகத்தான், ஷமி அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். எனது மகளின் பாஸ்போர்ட் காலம் முடிந்துவிட்டது. புதிய பாஸ்போர்ட்டுக்கு ஷமியின் கையெழுத்து தேவைப்பட்டது. அதற்காகவே எனது மகள் அவரது தந்தையை சென்று சந்தித்தார்.
ஆனால், ஷமி கையெழுத்து போடவில்லை. எனது மகளை அழைத்துக்கொண்டு ஷாப்பிங் மாலுக்குச் சென்று இருக்கிறார். ஷமி எந்த நிறுவனத்துக்கு விளம்பரம் செய்கிறாரோ, அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.
அந்த கடையில் இருந்து எனது மகள் ஷூ மற்றும் உடைகளை வாங்கினார். ஷமி அந்தக் கடையில் இருந்து வாங்கும் எந்தப் பொருளுக்கும் பணம் செலுத்தத் தேவையில்லை. அதற்காகத்தான் அங்கே அழைத்துச் சென்று இருக்கிறார். எனது மகள் கிட்டார் மற்றும் கேமரா வேண்டும் என விரும்பினார். ஆனால், அவற்றை அவர் வாங்கித் தரவில்லை. ஷமி எப்போதும் எனது மகளை பற்றி விசாரித்ததே இல்லை. அவர் எப்போதும் தனது வேலையில் மட்டுமே கவனமாக இருப்பார். ஒரு மாதத்திற்கு முன்பு, என் மகளை அவர் சந்தித்திருந்தார். ஆனால், அப்போது எதையும் பதிவிடவில்லை. ஆனால், இப்போது சமூக வலைதளத்தில் பதிவிட வேறு எந்த வீடியோவும் இல்லை என்பதால் இப்போது அதை பதிவிட்டு இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.