அமெரிக்கா-ஜெர்மனி விமானத்தில் இரண்டு இளைஞர்களை தாக்கிய இந்தியர் கைது
அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து(Chicago) ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு(Frankfurt) புறப்பட்ட லுஃப்தான்சா(Lufthansa) விமானத்தில் இரண்டு இளைஞர்களை தாக்கிய குற்றச்சாட்டில் இந்திய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட 28 வயது பிரணீத் குமார் உசிரிபள்ளி(Praneeth Kumar Usiripalli), 17 வயது பயணியின் தோளில் உலோக முள்கரண்டியால்(fork) குத்தி பின்னர் மற்றொரு 17 வயது இளைஞரைத் தாக்கி, அதே முள்கரண்டியால் அவரது தலையின் பின்புறத்தில் குத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து, விமானம் அமெரிக்காவின் பாஸ்டன் லோகன்(Boston Logan) சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது, அங்கு பிரணீத் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் சிறப்பு விமான அதிகார வரம்பில் ஒரு விமானத்தில் பயணிக்கும்போது உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் நோக்கில் ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக பிரணீத் குமார் மீது அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் $250,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.




