அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியா பாகிஸ்தான் செல்லாது: உறுதியளித்த ICC
9வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் திகதி முதல் மார்ச் 9ஆம் திகதி திகதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்க உள்ளன.
இருப்பினும், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணி இந்த முறையும் அங்கு செல்ல மறுத்து விட்டது. அதற்கு பதிலாக ஆசிய கோப்பை போட்டி போன்று தங்களுக்குரிய ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது.
ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவது தாமதமாகியுள்ளது.
இதனிடையே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய தலைவராக கடந்த 1-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட ஜெய்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பலக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு பாகிஸ்தான் சில நிபந்தனைகளுடன் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை வேறு இடத்தில் நடத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்பட்டது.
அத்துடன் 2027-ம் ஆண்டு வரை ஐ.சி.சி. போட்டிகள் அனைத்திலும் இதே நடைமுறையை பின்பிற்ற வேண்டும் என்ற பாகிஸ்தானின் நிபந்தனையை ஐ.சி.சி. உள்ளிட்ட அனைத்து தரப்பும் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்தியாவுக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் பொதுவான மைதானத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
இதேபோல், 2024 – 2027 வரை இந்தியாவில் நடைபெறும் எந்த ஐ.சி.சி. தொடர்களிலும் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்றும் அறிவித்துள்ளது. தற்போது போன்றே அந்த தொடர்களிலும் பாகிஸ்தானுக்குரிய ஆட்டங்கள் பொதுவான மைதானத்தில் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
“2024 முதல் 2027 வரையிலான தற்போதைய ஹோஸ்டிங் சுழற்சியில் இந்தியா அல்லது பாகிஸ்தானில் நடத்தப்படும் ஐசிசி போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான அனைத்து போட்டிகளும் போட்டி நடத்துபவர் முன்மொழியப்பட்ட நடுநிலை மைதானத்தில் விளையாடுவதற்கு ஐ.சி.சி ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, சாம்பியன்ஸ் டிராபி 2025 ஆம் ஆண்க்கான அட்டவணை விரைவில் உறுதி செய்யப்பட உள்ளது” என்று ஐ.சி.சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.