இலங்கைக்காக களமிறங்கும் இந்தியா: ஜெய்சங்கரிடம் மோடி அனுப்பும் செய்தி என்ன?
சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை தயாராகிவரும் நிலையில், இது விடயத்தில் இந்தியா முக்கிய வகிபாகத்தை வகிக்குமென தெரியவருகின்றது.
தனது இலங்கை பயணத்தின்போது கொழும்பில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஊடக சந்திப்பின்போது இது தொடர்பான அறிவிப்பை இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிடவுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடனேயே எதிர்வரும் 22 அல்லது 23 ஆம் திகதி கலாநிதி எஸ். ஜெய்சங்கர் கொழும்பு வருகின்றார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு முதன் முதலில் இந்தியாவே நேசக்கரம் நீட்டியது. மீட்பு பணிகளுக்கு முழமையான ஆதரவை வழங்கி இருந்தது.
அதன்பின்னர் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இலங்கையில் தற்காலிக பாலங்களை அமைப்பதற்குரிய முன்னெடுப்புகளையும் இந்தியா செய்திருந்தது.
இந்நிலையில் இலங்கையில் மீள் கட்டமைப்பு உட்பட மீண்டெழும் நடவடிக்கைக்காக இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டத்துக்கும் இந்தியா ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.
இதன்ஓர் அங்கமாக சர்வதேச கொடையாளர் மாநாடு விடயத்தில் இந்தியா முக்கிய பாத்திரத்தை வகிக்கவுள்ளது என நம்பப்படுகின்றது.
இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.





