இந்தியா – இலங்கை தொடர்! காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்!
இந்தியா மற்றும் இலங்கை அணி விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் சனிக்கிழமை தொடங்கி நடைபெற உள்ளது.
இதற்காக இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது. புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இதுவாகும். எனவே வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர்.
அவர்களுக்கு மாற்றாக இளம் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குவதற்கு முன்பு இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில், சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்தியாவிற்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் மோசமாக விளையாடி முதல் சுற்றிலேயே வெளியேறியது இலங்கை. இதனால் அணியின் கேப்டனாக இருந்த வனிந்து ஹசரங்க தனது பொறுப்பில் இருந்து விலகினார். இதனால் தற்போது சரித் அசலங்கா இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெறாத தினேஷ் சண்டிமால் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.
மேலும் தசுன் ஷனக அணியில் தனது இடத்தைத் தக்க வைத்து கொண்டார். மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் இந்த தொடரில் இடம் பெறவில்லை. இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் தவிர்த்து, 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்த அணியில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். அதே சமயம் ஜடேஜா, பும்ரா ஆகியோர் இடம் பெறவில்லை. அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளதால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. டி20 தொடர் ஜூலை 27, ஜூலை 28 மற்றும் ஜூலை 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்குகிறது.
இலங்கை அணி: பாத்தும் நிஸ்ஸங்க, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, சமிந்து விக்ரமசிங்க, மதிஷா துஷரமேரனா,
இந்திய அணி: சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.