58 ஆண்டுகளின் பின்னர் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இரண்டு போட்டி முடிவில் 1-1 என தொடரை சமன் செய்தது.
இதன் மூலம் 58 ஆண்டுகால தோல்வி மற்றும் ஒரு டிராவுடன் முடிந்திருந்த எட்ஜ்பாஸ்டனின் பழைய பதிவை மாற்றியமைத்தது.
இந்த போட்டியில், இந்தியாவுக்காக பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். அதன்படி, இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களும் எடுத்து அசத்தினார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் 250 மற்றும் 150 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்தார்.
மேலும், ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளுடன் (முதல் இன்னிங்ஸில் 4/88, இரண்டாவது இன்னிங்ஸில் 6/99) போட்டியின் நாயகனாக திகழ்ந்தார், ஆகாஷைத் தவிர, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்தியா முதல் இன்னிங்ஸில் 587 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 427 ரன்களும் எடுத்து 608 ரன்கள் இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது. ஐந்தாவது நாளில் இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸ் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, இந்தியா வெற்றி பெற்றது.
இந்த வெற்றி இந்தியாவின் வெளிநாட்டு மைதானங்களில் ரன்கள் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றியாகவும் பதிவாகியது, மேலும் இந்த டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்தது. இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூலை 10 முதல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.
கேப்டனாக வரலாற்று வெற்றி
டெஸ்ட் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்திய சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் கேப்டனாக முதல் வெற்றியை பதிவுசெய்தார். போட்டி நடைபெற்ற எட்ஜ்பாஸ்டன் பர்மிங்காம் மைதானத்தில் 58 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா முதல் வெற்றியை பதிவுசெய்தது. இதற்கு முன் விளையாடிய 8 போட்டிகளில் 7 தோல்வி, 1 டிராவில் முடிந்திருந்தது.