இந்தியா – பாகிஸ்தான் மோதல் – அரிசி இறக்குமதி பாதிக்கப்படும் அபாயம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அரிசி இறக்குமதி பாதிக்கப்படலாம் என்று மலேசியா எச்சரித்துள்ளது.
அரிசிக்காக வேறு இடங்களை நாட வேண்டி வரலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இப்போதைக்கு மலேசியா இறக்குமதி செய்யும் 40 சதவீதம் அரிசி இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் வருவதாக மலேசிய வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சு கூறியது.
அந்த இரு நாடுகளின் அரசியல், பொருளாதார நிலைத்தன்மை மலேசியாவின் உணவுப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியம் என்று அமைச்சர் முகமது சாபு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா வெள்ளை அரிசியையும் பாகிஸ்தான் பாஸ்மதி அரிசியையும் மலேசியாவுக்கு அனுப்புகின்றன.
இந்நிலையில் அந்த இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தால் அது மலேசியா மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
இப்போதைக்கு மலேசியாவில் அரிசிக் கையிருப்பு போதுமான அளவில் இருக்கிறது. ஆனாலும் வட்டாரத்திலுள்ள இதர அரிசி ஏற்றுமதி நாடுகளான வியட்னாம், தாய்லந்து, கம்போடியா ஆகிய நாடுகளுடன் அது உறவை வலுபடுத்தி வருகிறது.