சந்திரயான்-5 நிலவு பயணத்திற்காக கைகோர்க்கும் இந்தியா,ஜப்பான்

அடுத்த பத்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்யப்படும் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
நிலவு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் இந்தியாவின் ‘சந்திரயான்’ திட்டத்தில் ஜப்பானும் இணைகிறது.
இந்தியப் பிரதமர் மோடி தமது ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு சீனாவுக்கு புறப்பட்டார். அதற்கு முன்பு, அரிய வகை கனிமங்கள், தற்காப்பு, தொழில்நுட்ப மேம்பாடு எனப் பல்வேறு முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பானும் இந்தியாவும் விரிவான தொலைநோக்கு திட்டத்தை வகுத்துள்ளதாக அவர் கூறினார்.
தோக்கியோவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா, ஜப்பான் வா்த்தக மாநாடு நடைபெற்றது. அப்போது இருதரப்புக்கும் இடையே, பல்வேறு துறைசாா்ந்த 13 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அவற்றுள் கூட்டு விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்வது தொடா்பாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் (ஜக்ஸா) ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
நிலவை ஆய்வு செய்யும் இந்தியாவின் ‘சந்திரயான் 5’ திட்டத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
வா்த்தக மாநாட்டில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், முதலீடு, புதிய கண்டுபிடிப்புகள், பொருளியல் பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த தொலைநோக்குத் திட்டத்தை இந்தியாவும் ஜப்பானும் உருவாக்கியுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பரவலாக ரூ.6 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது.