இந்தியா -உத்தரப் பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்: புதிய கட்டுப்பாடுகள்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மாநில அரசாங்கம் தெரிவித்து உள்ளது.அது தொடர்பான அவசர ஆலோசனைக் கூட்டத்தை புதன்கிழமை (ஆகஸ்ட் 13) நடத்திய உத்தரப் பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத், கூட்டத்திற்குப் பின்னர் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
பறவைக் காய்ச்சல் அபாயம் இருப்பதால் மாநிலத்தின் அனைத்துத் துறைகளும் அதிகாரிகளும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதும் அவரது உத்தரவில் அடங்கும்.மேலும், “அனைத்து உயிரியல் பூங்காக்கள், பறவைகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் பசு காப்பகங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.
“மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
“அந்த வளாகங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் அனைத்து விலங்குகள், பறவைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டும்”, என்று முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
வனவிலங்குப் பூங்காக்களில் விலங்குகளோடு நெருங்கிய தொடர்பில் இருப்போர் தகுந்த பாதுகாப்பான உடைகளை அணிய வலியுறுத்தப்பட்டு உள்ளது.மேலும், பறவைக் காய்ச்சல் கிருமித் தடுப்பு நடவடிக்கைகளில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை நடத்துவோருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு அளித்துள்ளது.