இந்தியா – சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த பெரும் மோதலில் 26 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் 26 மாவோயிஸ்ட்டுகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுவிட்டதாக மாநில உள்துறை அமைச்சர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.மேலும் பல மாவோயிஸ்ட்டுகளைத் தேடும் பணி தொடர்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
“72 மணி நேரமாக அந்த நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. புதன்கிழமை (மே 21) நடந்த என்கவுன்டர் நடவடிக்கையில் 26க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டுவிட்டனர்,” என்று சர்மா விளக்கினார்.
சிபிஐ அமைப்பின் தலைமைச் செயலாளரான நம்பளா கேசவராவ் எனப்படும் பசவராஜும் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் எனக் கூறப்பட்டது.
ஆந்திர மாநிலத்தின் விஜயநகரம் பகுதியைச் சேர்ந்த பசவராஜ், தேசியப் புலனாய்வுப் பிரிவினராலும் தெலுங்கானா, ஆந்திர மாநிலக் காவல்துறையினராலும் தேடப்பட்டு வந்தவர்.
மது, நவீன் என்ற வேறு இரு முக்கியத் தலைவர்களும் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகினர்.
மாட் பகுதி மாவோயிஸ்ட் பிரிவின் மூத்த தலைவர்கள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, நாராயண்பூர், தான்டேவடா, பிஜப்பூர், கொண்டாகான் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ரிசர்வ் படையினர் அபுஜ்மத் பகுதியில் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
‘ஆப்பரேஷன் காகர்’ எனும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்த என்கவுன்டர் இடம்பெற்றதாகப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் கரேகுட்டலு மலைப்பகுதிக்கு அருகே மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக ‘ஆப்பரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ எனும் நடவடிக்கையைப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டனர். மத்திய ரிசர்வ் காவல்படையினரும் மாநிலக் காவல்துறையினரும் இணைந்து கடந்த ஏப்ரல் 21 முதல் மே 11 வரை மேற்கொண்ட 21 நாள் நடவடிக்கையில் 31 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களின் தலைகளுக்கு ரூ.1.72 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.