பெறுமதி சேர் வரி அதிகரிப்பு டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு பொருந்தாது!! அரசாங்கம்
உத்தேச 18 சதவீத பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு பொருந்தாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உத்தேச பெறுமதி சேர் வரி அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் இந்த வருடம் டிசம்பர் 10 ஆம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, அம்பாந்தோட்டை பிரதேசத்தில் இலங்கையின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்த திட்டத்திற்கு அமைச்சரவை உபகுழு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாகவும் அடுத்த வாரம் அமைச்சரவையில் அனுமதி கிடைக்கும் என நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு வருடத்திற்குள், இலங்கையில் உள்ள அனைத்து 27,000 மத வழிபாட்டுத் தலங்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், பிராந்திய மற்றும் மாவட்டச் செயலகங்களுக்கு சோலார் பேனல்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.