மாகாண சபை தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
மாகாண சபை தேர்தலை நடத்தும் விதம் பற்றி ஆராய்ந்து இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம், எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுக்கவுள்ளார் என தெரியவருகின்றது.
இது தொடர்பில் பிரதமருக்கு இன்று அல்லது நாளை எழுத்துமூலம் தெரியப்படுத்தப்படவுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு- செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், எந்த முறைமையின்கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
கட்சி தலைவர்கள்கூடி பொருத்தமான முறைமை தொடர்பில் தீர்மானம் எடுத்தால், அதற்கமைய தேர்தலை நடத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறி இருந்தார்.
இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதிவரை வரவு- செலவுத் திட்ட கூட்டத் தொடர் நாடாளுமன்றத்தில் இடம்பெறும். எனவே, நாடாளுமன்ற வளாகத்தில் இக்கூட்டம் நடத்துவதற்குரிய வாய்ப்பு உள்ளது.
மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் நடத்துமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்குரிய சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும். அவ்வாறு நிறைவேற்றினால் அடுத்த வருடம் ஆரம்பத்தில் தேர்தலை நடத்துவதற்குரிய சாத்தியம் உள்ளது.





