அமெரிக்காவில் பொலிசாரை தாக்கிய புலம்பெயர்ந்தோர்: எதிராக அணி திரண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் ஒருவரைக் கைது செய்ய முயன்ற பொலிசாரை, சக புலம்பெயர்ந்தோர் தாக்கிய விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை, அமெரிக்காவின் நியூயார்கிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தின் அருகே அமைந்துள்ள புலம்பெயர்ந்தோர் மையம் ஒன்றின் முன் நின்றுகொண்டிருந்த புலம்பெயர்ந்தோர் சிலரைக் கலைக்க பொலிசார் சிலர் முயன்றுள்ளார்கள்.
அப்போது அவர்கள் புலம்பெயர்ந்தோர் ஒருவரைக் கீழே தள்ளிக் கைது செய்ய முயல, அதைக் கண்ட அவரது சக புலம்பெயர்ந்தோர் அந்த பொலிசாரைத் தாக்கத் துவங்கினர்.இந்த காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியுள்ளன. அந்த தாக்குதலில் சுமார் 12 பேர் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்களில் ஆறு பேரை பொலிசார் கைது செய்தார்கள். மற்றவர்கள் தப்பியோடிவிட்டார்கள்.
கைது செய்யப்பட்டவர்களிலும் ஒருவர் மட்டும்தான் சிறையில் உள்ளார், மற்றவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் புலம்பெயர்தல் முக்கிய பிரச்சினையாக முன்வைக்கப்பட உள்ளது.இப்படிப்பட்ட சூழலில் பொலிசார் மீது புலம்பெயர்ந்தோர் தாக்குதல் நடத்த, அவர்களுக்கெதிராக ஆளும் ஜனநாயகக் கட்சியினருடன் குடியரசுக் கட்சியினரும் இணைந்துகொண்டுள்ளனர்.
பொலிசாரைத் தாக்கிய புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தவேண்டும் என அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அத்துடன், பொலிஸ் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும், பொலிசாரைத் தாக்கிய புலம்பெயர்ந்தோரை எப்படி ஜாமீனில் விடலாம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.