அவுஸ்ரேலியாவில் சட்டவிரோத வானவேடிக்கையால் பலர் பாதிப்பு
அவுஸ்ரேலியா முழுவதும் 2026 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்ற அதேவேளை, சட்டவிரோத வானவேடிக்கை விபத்துகளால் ஆங்காங்கே பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
சிட்னியில் சட்டவிரோத பட்டாசு வெடித்ததில் 12 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மெல்போர்னில் ஒருவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் போண்டா பீச் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, இம்முறை சிட்னியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நீண்ட தூர ஆயுதங்களை ஏந்திய பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
சிட்னி துறைமுகத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் கொண்டாட்டங்களை ஆரம்பித்தனர்.
விக்டோரியா மாகாணத்தில் மட்டும் பட்டாசு தொடர்பான 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.
மேற்கு அவுஸ்ரேலியாவில் பட்டாசு எரிந்ததால் காட்டுத்தீ ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
அமைதிக்குக் குந்தகம் விளைவித்த குற்றத்திற்காக சிட்னியில் 38 பேரும், மெல்போர்னில் 18 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான மக்கள் ஒழுக்கத்துடன் கொண்டாடிய போதிலும், ஒரு சிலரின் கவனக்குறைவான செயல்களால் இந்த அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





