ஊடகங்கள்மீது கை வைத்தால் என்.பி.பி. அரசாங்கத்தின் கதை முடியும்!
ஊடகங்கள்மீது கைவைக்க முற்பட்டால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காணாமல்போக நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தி (SJP) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் (S.M. Marikar) எச்சரிக்கை விடுத்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஊடக நிறுவனங்கள் தவறிழைத்தால் , தவறான செய்திகளை வெளியிட்டால் அதற்கு எதிராக சாதாரண சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். ஊடகத்துறை அமைச்சில் முறைப்பாடும் செய்ய முடியும்.
நிலைமை இவ்வாறு இருக்கையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு எதிராக அரசாங்கம் எப்படி நேரடியாக தொலை தொடர்பு ஆணைக்குழுவை நாட முடியும்?
இதன்மூலம் தமக்கு வெள்ளையடிப்பு செய்யும் ஊடகங்களை பாதுகாத்து, தவறுகளை சுட்டிக்காட்டும் ஊடகங்களை ஒடுக்குவதற்கே அரசாங்கம் முற்படுவதுபோல் தெரிகின்றது.
ஊடகம்தான் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகும். அதனை தடைசெய்வதற்கு முற்பட்டால் அரசாங்கம் காணாமல்போக நேரிடும்.
அதேபோல ஊடகவியலாளர்களும் தமது பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட வேண்டும்.” – என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்கீழ் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது என ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தகவல்களை சித்தரித்து, தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களை குழப்பும் வகையில் செயல்படும் ஊடகங்கள் தொடர்பிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.




