13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தினால் யாழில் மத நல்லிணக்கம் இருக்காது!
13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் இந்நாட்டு மக்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றில் முன்னிலையாகிய பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ”13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தாவிடின் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டதன் பின்னர் வடக்கில் மத நல்லிணக்கம் எஞ்சியிருக்காது.
கொழும்பில் இந்துக்கள் காவடிகள் எடுத்து செல்லலாம். அதில் யாரும் தலையிடுவதில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில், உள்ள ரஜமஹா விகாரையின் சமய சடங்குகளை செய்யமுடியாது.
இவ்வாறான தீவிரவாத சிந்தனையுடன் செயற்படும் அரசியல்வாதிகளைக் கொண்ட மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரம் மற்றும் ஏனைய அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படுமாயின், தற்போதுள்ள நல்லிணக்கமும் ஒற்றுமையும் அழிந்து நல்லதொரு இடத்திற்குச் செல்லாது” எனத் தெரிவித்துள்ளார்.