நான் சிங்கள பௌத்த விரோதி அல்ல!!! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தனது இல்லத்திற்கு முன்பாக இரண்டு நாட்களாக இடம்பெற்று வரும் போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், தாம் பௌத்தக் கொள்கைக்கு எதிரானவர் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தனது மக்களின் உரிமைகளை மீறும் வகையில் தொல்பொருள் அடையாளங்களை அழிப்பதை நிறுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக நிலவும் பௌத்த நம்பிக்கைகளுக்கு தாம் எதிரானவர் அல்ல.
எவ்வாறாயினும், தமிழ் மக்களின் உரிமைகளை மீறி அவர்களின் காணிகளை பலவந்தமாக ஆக்கிரமித்து விகாரைகள் கட்டப்படுவதை தமது கட்சி எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் கருத்துத் தெரிவித்தார்.
அதில், வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் கட்டாய பௌத்தமயமாக்கலுக்கு எதிராக தமது கட்சி தொடர்ந்து குரல் எழுப்பும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வுகளுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பகிரங்க எதிர்ப்பின் காரணமாகவே சிங்கள தேசியவாத கட்சிகள் இவ்வாறான போராட்டங்களை நடத்துவதாகவும் செல்வராஜா கஜேந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.
இதற்கு முன்னர் பொலிஸார் கொலைமிரட்டல் விடுத்ததாகவும், தற்போது தமது கட்சி பிரதிநிதிகளை போராட்டங்கள் மூலம் வாயடைக்க அரசாங்கம் செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.