கலீதா ஜியாவின் இறுதி அஞ்சலி – டாக்காவில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள்
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, லட்சக்கணக்கான மக்கள் தலைநகர் டாக்காவில் திரண்டனர்.
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா, உடல் நலக்குறைவால் தனது 80 ஆவது வயதில் நேற்று காலமானார்.
தேசியக் கொடியால் மூடப்பட்ட வாகனத்தில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்ட போது, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நாடு முழுவதும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
பாதுகாப்பு ஏற்பாடுகளாக ஆயிரக்கணக்கான பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இறுதி அஞ்சலிக்கு வந்த பலர் ஜியாவை ஒரு ஊக்கமளிக்கும் தலைவராக நினைவு கூர்ந்தனர். பெண்களின் கல்விக்காக அவர் கொண்டு வந்த உதவித்தொகை திட்டங்கள் பல குடும்பங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த அரசுத் தகுதி உடைய இறுதிச் சடங்கில் இந்தியா, பாகிஸ்தான், பூட்டான் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஒரு இல்லத்தரசியிலிருந்து பங்களாதேஷின் முதல் பெண் பிரதமராக உயர்ந்த கலீதா ஜியாவின் அரசியல் பயணம் இந்நிகழ்வுடன் நிறைவடைந்தது.
அவர் 1991 மற்றும் 2001 ஆண்டுகளில் நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.
கணவர் ஜியாவுர் ரஹ்மானின் படுகொலைக்குப் பிறகு அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்த ஜியா, பல ஆண்டுகள் ஜனநாயகத்திற்காகவும் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் போராடிய முக்கிய தலைவராக நினைவுகூரப்படுகிறார்.





