இலங்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: புலனாய்வு பிரிவும் களமிறக்கம்!
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வழிபாட்டு இடங்கள், முன்னணி ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாத்தளங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் வணிக வளாகங்கள், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்கள் உட்பட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும், பொலிஸ்மா அதிபரால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் போக்குவரத்து விதிமுறை மீறல் உட்பட போக்குவரத்து குற்றங்களை கண்காணிப்பதற்குரிய சிறப்பு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
பாதுகாப்பு நடவடிக்கையின்போது தேவையேற்படும்பட்சத்தில் பொலிஸாருக்கு உதவுவதற்கு இராணுவம் தயாராக இருப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார் என ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேல்மாகாணத்தில் மாத்திரம் சட்டம், ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு 2 ஆயிரத்து 500 கூடுதல் பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல கண்காணிப்பு நடவடிக்கைக்காக புலனாய்வாளர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.சிவில் உடையில் பொலிஸாரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடக்கூடும்.
நத்தார் வழிபாடுகள் இடம்பெறும் நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.
பண்டிகை காலம் முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத் தலைமையகத்தில் சிறப்பு செயல்பாட்டு அறை (special Operations Room) நிறுவப்பட்டுள்ளது.
குறித்த செயல்பாட்டு மையம் பண்டிகை காலம் முடியும் வரை செயல்படும்.
முப்படைகள் மற்றும் இலங்கை காவல்துறைக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் குறித்த பிரிவு செயல்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.





