கனடாவில் காணாமல் போய் 50 நாட்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட மலையேறி!
கனடாவின் வடக்கு மலைப் பகுதியில் காணாமல்போன மலையேறி இவ்வாரம் உயிருடன் மீட்கப்பட்டதாக நவம்பர் 27ஆம் திகதி அன்று அறிவிக்கப்பட்டது.
சேம் பெனாஸ்டிக் எனும் மலையேறி அக்டோபர் 19ஆம் திகதியன்று காணாமல் போனார். கரடுமுரடான மலைப் பாதைகள், அடிக்கடி மாறும் பருவநிலை, பனிப்பாறை, நீருற்று, நீர்வீழ்ச்சி உள்ளிட்ட ஆபத்தான பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ரெட்ஃபெர்ன் கெய்லி மாவட்ட பூங்காவில் அவர் காணாமல் போனார்.
உறைபனி நிலவிய இடத்தில் அவர் 50 நாள்கள் உயிருக்குப் போராடியிருக்கிறார்.அவரைத் தேடி மீட்கும் பணியில் காவல்துறை, மீட்புப் பணியாளர்கள், குடும்பத்தினர் ஈடுபட்டனர். அந்த பனிபடர்ந்த ஆபத்தான வனப்பகுதியில் அவர்கள் அனைவரும் சல்லடை போட்டு தேடினர். நாள்கள் கடந்த நிலையில் அவர் இருப்பதற்கான அறிகுறி தென்படாததால் அவர்களது நம்பிக்கை குறைந்தது.
வெப்பநிலையும் பூஜ்யத்துக்கும்கீழ் சரிந்தது. குளிர்காலத்தில் பனிச்சரிவுகள் ஏற்படும் என பூங்கா எச்சரிக்கை விடுத்தது. ஒரு கட்டத்தில் அவரைத் தேடும் பணி நிறுத்தப்பட்டதாக கனடாவின் காவல்துறை கூறியது.
இதற்கிடையே பெனஸ்டிக்கின் குடும்பத்தினர் பூங்காவுக்கு அருகே உள்ள பஃப்லோ இன் பிங்க் மவுண்டன் ஹோட்டலில் பல வாரங்களைக் கழித்தனர். பெனஸ்டிக் கண்டுபிடிப்பதற்கு முன்பு குடும்பத்தினர் ஹோட்டலைவிட்டு வெளியேறிவிட்டதாக அந்த ஹோட்டலின் நிர்வாகியான மைக்கல் ரெய்ட் தொலைபேசி நேர் காணலில் தெரிவித்தார்.
பின்னர், சேம் பெனஸ்டிக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, ஒரு மலைப் பாதையில் வேலைக்குச் சென்ற இரண்டு ஊழியர்கள், ஒருவர் தங்களை நோக்கி நடந்து வருவதைக் கண்டதாக காவல்துறை ஓர் அறிக்கையில் தெரிவித்தது.அவர், பெனாஸ்டிக் என்று அடையாளம் கண்ட இருவரும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மருத்துவமனையிலும் அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டது.
“சேம் பெனாஸ்டிக் உயிருடன் மீட்கப்பட்டது சிறந்த வேலை,” என்று காவல்துறை பேச்சாளரான மடோனா சாண்டர்சன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.சேம் பெனாஸ்டிக் எப்படி காணாமல்போனார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.