இலங்கை அரசுக்கு கடும் அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் ‘சதி’ நடவடிக்கை
இலங்கை அரசுக்கு கடும் அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் ‘சதி’ நடவடிக்கையொன்று இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலையடுத்து கொழும்பில் முக்கிய பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸார், முப்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் கலகமடக்கும் பிரிவினரை உள்ளடக்கிய வகையில் விசேட கூட்டு பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அத்துடன், குருணாகலை உட்பட நாட்டில் ஏனைய சில இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
கொழும்பு பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி, அரசுக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் இரகசிய நடவடிக்கை இடம்பெறுவதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிட்டியுள்ளது.
இதனையடுத்து கொழும்பு பல்கலைக்கழகம், சுதந்திர சதுக்கம், அலரிமாளிகை வளாகம் உட்பட மேலும் சில இடங்களில் வீதி சோதனை சாவடி உட்பட விசேட பாதுகாப்பு நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டது.
புலனாய்வு பிரிவிடம் இருந்து மீள தகவல் கிடைக்கப்பெறும்வரை இந்த பாதுகாப்பு திட்டம் அமுலில் இருக்கும் எனக் கூறப்படுகின்றது.
அதேவேளை, கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதையடுத்து அது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பல கோணங்களில் தகவல்கள் பரவின. மஹிந்தவை பிரதமராக்கவே இந்த பாதுகாப்பு ஏற்பாடு என்ற தகவலும் இதில் உள்ளடங்கியிருந்தது.