ஊட்டி, குன்னூரில் பலத்த மழை, 16 இடங்களில் மண் சரிவு – ரயில் சேவைகள் பாதிப்பு
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குன்னூரில் 215 மில்லி மீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பனியின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது.
அவ்வப்போது உறை பனியின் தாக்கம் அதிகமாக தென்பட்ட நிலையில், திடீரென காலநிலை மாறி மழை பெய்தது. நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் உழவர் சந்தை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்கள் சேதமானதாக தெரிவிக்கப்படுகிறது.
மலை ரயில் பாதையில் ஐந்து இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





