வர்ணனையின் போது இனவெறியுடன் விமர்சித்த ஹர்பஜன் சிங்

கிரிக்கெட் போட்டி வர்ணனையின் போது இங்கிலாந்து வீரரை இனவெறியுடன் விமர்சித்ததாக ஹர்பஜன் சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் என்னதான் விறு விறுப்பாக விளையாடினாலும், அந்த போட்டிகளை நேரலையில் விவரிப்பதன் மூலம் பார்ப்பவர்களுக்கு சுவாரிஸ்யம் குறையாமல், கொண்டு சேர்ப்பது வர்ணனையின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
களத்தில் இருக்கும் வீரர்களின் திறமைகளையும், போட்டிகளின் முக்கிய தருணங்களையும் வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அப்படியான சூழலில், சில வர்ணனையாளர்கள், சுவாரிஸ்யமாக பேசுகிறேன் என்ற பெயரில் சர்ச்சைகளிலும் சிக்கி கொள்கின்றனர்.
இந்திய அணியின் டெர்பனேடர் என்று செல்லமாக அழைக்கப்படும் ஹர்பஜன் சிங் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவரும் ஹர்பஜன் சிங், தற்போது ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை ஹர்பஜன் சிங் வர்ணனை செய்தார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 286 ரன்கள் குவித்தது. ராஜஸ்தானின் நட்சத்திர வீரரும் இங்கிலாந்தைச் சேர்ந்தவருமான ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 76 ரன்களை வழங்கி சாதனையைப் படைத்தார்.
இதுகுறித்து வர்ணனையில் ஈடுபட்டிருந்த ஹர்பஜன் சிங், ”லண்டனின் கருப்பு நிற டேக்ஸிகளின் மீட்டர்களைப் போல, ஜோஃப்ரா ஆர்ச்சரின் மீட்டர்களும் அதாவது ரன்களும் அதிகளவில் இருக்கிறது” என்று விமர்சனம் செய்தார். அவரது அந்த கமெண்ட், சமூக வலைதளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஹர்பஜன் சிங்கின் இந்த கருத்தை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இது மிக மோசமான கமெண்ட் என்று விமர்சித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட இங்கிலாந்து வீரரிடம் ஹர்பஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரராக ஹர்பஜன் சிங் கிரிக்கெட் விளையாடிய காலத்தில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வீரர்கள் அவருடன் இனவெறியுடன் மோசமாக நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்தன. அப்போது ஹர்பஜனுக்கு ஆதரவாக கிரிக்கெட் ரசிகர்கள் பலர் குரல் கொடுத்தனர்.
இப்போது அதே ஹர்பஜன், இன்னொரு வீரரை பார்த்து இனவெறி சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலான கமெண்ட் செய்திருப்பது, இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஹர்பஜன் சிங், இதுகுறித்து எந்தவித ரியாக்ஷனும் இதுவரை செய்யவில்லை
கிரிக்கெட் போட்டிகளின் போது, வர்ணனையாளர்கள் இதுப்போன்று கமெண்ட்ரீ செய்து, சர்ச்சை ஆவது என்பது, இது ஒன்று புதிதல்ல, இதற்குமுன் பலமுறை இப்படி வர்ணனையாளர்கள் சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர்.
சமீபத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ஜாஸ்ப்ரீத் பும்ரா குறித்து பேசிய, வர்ணனையாளர் இஷா குஹா “ப்ரைமேட்” என்ற வார்த்தையைப் பயன்படுத்திருந்தது சர்ச்சையை கிளப்பியது.
”பும்ராவை விலங்குடன் ஒப்பிட்டு பாராட்டுவதா?” என்று இஷாவுக்கு எதிராக ரசிகர்கள் அவர் பக்கம் திரும்பியது. சமூக வலைதளங்களில் இஷாக்கு எதிர்ப்புகள் வலுத்து வந்த நிலையில், அவர் உடனடியாக அதற்கு வருத்தமும் தெரிவித்தார்.
குறிப்பாக கடந்த ஆண்டு நடந்த மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ”முனிஷ் பாலி” குறித்து இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியது சர்ச்சையை கிளப்பியது.
“வட மாநில வீரர்களை பற்றி எனக்கு அதிகமாக தெரியாது என்று சர்ச்சைக்குறிய வகையில் அவர் பேசியதால், வட இந்திய ரசிகர்கள் பலரும் சஞ்சய் மஞ்ச்ரேக்கரை சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சித்தனர்.
சில கிரிக்கெட் வீரர்கள் மீது தொடர்ச்சியாக வெறுப்பை காட்டுகிறார் என குற்றசாட்டு எழுந்ததை தொடர்ந்து, சஞ்சய் மஞ்ச்ரேக்கர்க்ஷ் வர்ணனையாளர் குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.
இதற்குமுன், ஹர்ஷா போக்லேவும் இதேபோன்ற சில காரணங்களுக்காக வர்ணனையாளர் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் வெறும் போட்டி என்பதை தாண்டி, அதை விளையாடும் வீரர்களை கடவுள்களாக பார்க்கும் ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கவனத்துடன் கமெண்ட்ரீ செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.