தோஹாவில் இஸ்ரேலிய தாக்குதலில் தலைமை தப்பியதாக கூறும் ஹமாஸ்,ஆனால் உறுப்பினர்கள் அறுவர் பலி

பாலஸ்தீனக் குழுவான ஹமாஸ், கத்தார்த் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தனது உறுப்பினர்களில் அறுவர் உயிரிழந்ததாக கூறியுள்ளது.
இருப்பினும் தனது சமரசக் குழு உறுப்பினர்களைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்விகண்டதாக அது சொன்னது.
காஸா வட்டாரத்தில் சண்டையை நிறுத்த அண்மையில் அமெரிக்கா பரிந்துரையொன்றை முன்வைத்திருந்தது. அதுபற்றிக் குழுவினர் விவாதித்துக்கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்தது. சந்திப்பு நடைபெற்ற குடியிருப்பு வளாகம் தொடர் குண்டுவெடிப்புகளால் கடுமையாகச் சேதமுற்றது.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, தாக்குதல் முற்றிலும் நியாயமானது என்றார். 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஏற்பாடு செய்த ஹமாசின் மூத்த தலைவர்களை அது குறிவைத்ததாக அவர் சொன்னார். அண்மை காஸா போருக்கு அதுவே காரணமாக அமைந்தது.
இஸ்ரேலியத் தாக்குதலைக் கத்தார் கண்டித்தது. அது கோழைத்தனமானது என்று கூறிய கத்தார், அனைத்துலகச் சட்டத்தை இஸ்ரேல் அப்பட்டமாய் அத்துமீறியிருப்பதாகச் சொன்னது.
கத்தாரின் உள்துறை அமைச்சு, அதன் உள்நாட்டுப் பாதுகாப்புப் படையின் உறுப்பினர் ஒருவர் மாண்டதாகவும் சிலர் காயமுற்றதாகவும் தெரிவித்தது. ஹமாஸ் குழுவில் எத்தனை பேர் தாக்குதலுக்கு ஆளாயினர் என்ற விவரத்தை அது வெளியிடவில்லை.
தாக்குதல் துரதிருஷ்டவசமானது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நம்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.ஆயினும் ஹமாசைத் துடைத்தொழிக்க வேண்டும் என்பது நல்லதோர் இலக்கு என்றார் டிரம்ப்.