மீண்டும் கடத்தல்: நைஜீரியாவில் 28 பேர் மாயம்
நைஜீரியாவின் பிளாட்டோ (Plateau) மாநிலத்தில், வருடாந்த இஸ்லாமிய நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காகப் பேருந்தில் பயணித்த 28 பேர் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு கிராமங்களுக்கு இடையே பயணித்துக் கொண்டிருந்தபோது, இந்த பேருந்தை வழிமறித்த கும்பல், அதில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரையும் கடத்திச் சென்றுள்ளது.
தற்போது கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் தலா 1.5 மில்லியன் நைரா (Naira) பிணைத்தொகை கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவின் கத்தோலிக்கப் பாடசாலை ஒன்றில் கடத்தப்பட்டிருந்த 130 மாணவர்கள் விடுவிக்கப்பட்ட மறுதினமே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை மீட்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நைஜீரியாவில் அதிகரித்து வரும் இத்தகைய கடத்தல் சம்பவங்கள் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.





