திருமலையில் இன்று மூன்று பாடசாலைகளில் கையளிக்கப்பட்ட பசுமை வகுப்பறைகள்
திருகோணமலையில் உள்ள மூன்று பாடசாலைகளில் முன்மாதிரி பசுமை வகுப்பறை ஒழுங்கமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. இத் திட்டம் வன்னி ஹோப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் நிதி பங்களிப்போடு Trinco Aid நிறுவனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு செயற்படுத்தபட்டது.
பசுமை வகுப்பறை என்பது நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்ட கற்றல் சூழலாகும். இது சுற்றுச்சூழல், விழிப்புணர்வு ,பிளாஸ்டிக் பாவனையை கட்டுப்படுத்தல் மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கும் ஒரு இடமாகும், மேலும் இது சுற்றுச்சூழலை மதிக்கும் வகையில் எவ்வாறு வாழ வேண்டும் மற்றும் கற்றுக்கொள்வது என்பது குறித்து மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் வகுப்பறை ஒழுங்கமைக்கப்பட்டது.
முதல் பசுமை வகுப்பறை கடந்த மாதம் திருகோணமலை தி/புனித மரியாள் கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டது. இன்று மூன்று பாடசாலைகளில் வகுப்பறைகள் பசுமை வகுப்பறைககளாக அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்றைய திறப்பு விழா தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியிலும், தி/சாஹிரா கல்லூரியிலும், தி/சிங்கள மகா வித்தியாலயத்திலும் ஆரம்பிக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கிழக்கு மாகாண சுற்றுலா துறையின் தவிசாளர் திரு. P. மதனவாசன் அவர்களும், வலயக்கல்வி பணிப்பாளர் திரு. T. ரவி சேர் அவர்களும் கலந்து கொண்டனர். லயோலா சுற்றுச்சூழல் மற்றும் நீதி மையத்தின் பணிப்பாளர் Rev.Dr. Thierry J.Robouam, S.J அவர்களும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் திரு. Mr. M.T.மொஹமட் பாரிஸ் அவர்களும், Trinco Aid இன் பணிப்பாளர் திருமதி. தயாளினி ஹரிஹரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
மற்றும் Trinco Aid சார்பில் நிறுவனர் திரு. இராஜக்கோன் ஹரிஹரன் அவர்களும் நிகழ்ச்சி முகாமையாளர் திரு. சங்கரலிங்கம் நவநீதன் அவர்களும், வன்னி ஹோப் நிறுவனத்தின் ஊழியர்கள், வகுப்பு ஆசிரியை, பழைய மாணவ சங்க உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து திருகோணமலை நகரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாகவும், பசுமை வளாகங்கள் அமைப்பது தொடர்பாகவும், பாடசாலை மாணவர்களை கொண்டு சிறந்த செயல்திட்டங்களை எதிர்வரும் காலங்களில் செயல்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இத் திட்டம் SDG03 – Good Health and Well-being, SDG4 – Quality Education, SDG13 – Climate action, SDG15 – Life on land ஆகிய இலக்குகளை மையமாக கொண்டு நகர்கிறது. அந்த வகையில் பசுமை வகுப்பறை என்பது நிலையான நடைமுறைகளை உள்ளடக்கிய மற்றும் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் நோககுடன் அமைகிறது.