விவசாயிகளின் போராட்டத்திற்கு பணிந்தது பிரித்தானிய அரசு: பண்ணை வரி வரம்பில் அதிரடி மாற்றம்
பிரித்தானியாவில் விவசாய நிலங்களுக்கான பரம்பரை வரி விதிப்பில், ஒரு மில்லியன் பவுண்டுகளாக இருந்த வரி விலக்கு வரம்பை 2.5 மில்லியன் பவுண்டுகளாக உயர்த்துவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த 14 மாதங்களாக விவசாயிகள் முன்னெடுத்து வந்த தொடர் போராட்டங்கள் மற்றும் அரசியல் அழுத்தங்களைத் தொடர்ந்தே இந்தத் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த வரி மாற்றத்தின் மூலம், சாதாரண குடும்பப் பண்ணைகள் பாதுகாக்கப்படும் என சுற்றுச்சூழல் செயலாளர் எம்மா ரெனால்ட்ஸ் (Emma Reynolds) தெரிவித்துள்ளார்.
புதிய விதிகளின்படி, ஒரு தம்பதியினர் வரி செலுத்தாமல் 5 மில்லியன் பவுண்டுகள் வரை சொத்துக்களை வாரிசுகளுக்கு மாற்ற முடியும். அரசின் இந்த முடிவை விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ள போதிலும், எதிர்க்கட்சியினர் இந்த வரி முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.





