தேசியக் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஒடிசா அரசு
ஒடிசா மாநில அரசு, கல்விமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் தேசியக் கல்விக் கொள்கை (NEP 2020) நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.
மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி இவ்வாறு முடிவெடுத்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “உயர்கல்வி முறையை மிகவும் தரமானதாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியக் கல்விக் கொள்கையின்படி, வழக்கமான மூன்றாண்டுப் பட்டப் படிப்புகளுக்குப் பதிலாக நான்கு ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்புகள் தொடங்கப்படும். இதில் சேரும் மாணவர்கள், ஒவ்வோர் ஆண்டையும் நிறைவுசெய்த பிறகு, பட்டயம், பட்டம், கௌரவ பட்டம் ஆகியவற்றுக்கான சான்றிதழ்களைப் பெறலாம் என்று அறிக்கை கூறியது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மாநில அரசு கூடுதல் தகுதிகளுக்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என்றும் இதன்கீழ் மாணவர்கள் திறன் மேம்பாடு, உள்ளகப் பயிற்சி, சமூக சேவை போன்றவற்றை மேற்கொள்வர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மாணவர்களே தங்கள் பாடங்களைத் தேர்வுசெய்யவும் ‘இடைநிற்றல், மீண்டும் சேருதல்’ விருப்பத்தைப் பயன்படுத்தி ஏழு ஆண்டுகளுக்குள் பட்டப் படிப்பை முடிக்கவும் இந்தத் திட்டம் உதவும்,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.