அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றிய ஹிமாலியின் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் அரசாங்கம்!
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய ஹிமாலி அருணதிலக்க மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், பணிப்பெண்ணுக்கு சம்பளம் வழங்குவதில் எவ்வித மோசடியும் செய்யவில்லை என தெரிவித்தார்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக திருமதி ஹிமாலி அருணாதிலக்க தற்போது பணியாற்றி வருவதாகவும் அவர் இன்னும் நாட்டுக்காக உழைத்து வருவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அவர் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகராகப் பணிபுரிந்தபோது, இந்நாட்டில் பணிபுரியும் ஒரு ஊழியரின் சம்பளத்தை ஒழுங்காகச் செலுத்தாததற்காக அவுஸ்திரேலியாவின் பெடரல் நீதிமன்றத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தான் எந்தவொரு தனிப்பட்ட மோசடியையும் செய்யவில்லை எனவும், இராஜதந்திரிகளுக்கு பணிபுரிபவர்களின் சம்பளம் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
எனவே, திருமதி ஹிமாலி அருணாதிலக்க எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களுக்கு அரசாங்கம் என்ற வகையில் வருந்துவதாகவும், இலங்கையில் குறைந்த சம்பளம் வழங்கப்படுவதால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.