இலங்கையில் உச்சம் தொட்டுள்ள தங்கத்தின் விலை!

சர்வதேசத்தில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்று(16) இலங்கையில் தங்கத்தின் விலை 60,000 அதிகரித்துள்ளது என்று சந்தை தரவுகள் காட்டுகின்றன.
அதன்படி, இன்று காலை (16), கொழும்பில் உள்ள செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் “22 காரட்” தங்கத்தின் விலை 10,000 ரூபாவால் அதிகரித்து 360,800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த வியாழக்கிழமை 330,000 ரூபாவாக இருந்த “24 காரட்” தங்கத்தின் பவுன் ஒன்று இப்போது 390,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உலகின் பொருளாதார மற்றும் அரசியல் நிலை குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளைத் தேடுவதால், தங்கத்தின் விலை முதல் முறையாக இவ்வாறு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.