உலகெங்கும் Twitter சமூக ஊடகத் இணையத் தளத்தின் செயற்பாட்டு வேகம் கடந்த சில தினங்களாக மந்தமடைந்துள்ளது.
இதனால் பயனாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், என்ன நடந்தது என்று Twitter நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பயனாளி ஒருவர் நாளொன்றுக்குப் பார்வையிடுகின்ற பதிவுகளது எண்ணிக்கையைத் தற்காலிகமாக வரையறை செய்வதாக Twitter நிறுவனத்தின் உரிமையாளர் Elon Musk தெரிவித்திருக்கிறார்.
தரவுகளை அணுகுவது உச்ச அளவுக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காகவே இந்த வரையறை என்று அவர் தனது Twitter பதிவு ஒன்றில் விளக்கம் அளித்திருக்கிறார்.
சதா முழு நேரமும் டிஜிட்டல் திரைகளோடு இருக்காமல் வெளியே சென்று குடும்பத்தவர்களைச் சந்திப்பதை இது ஊக்குவிக்கும் என்று மற்றொரு பதிவில் பல்தேசிய வர்த்தக பில்லியனராகிய அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஸ்மார்ட் போன் மீதான ஆழ்ந்த மயக்கத்தில் இருந்து எழுந்திருங்கள், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக அதிலிருந்து விலகி இருங்கள். பார்வை வரம்பை நான் நிர்ணயித்ததற்குக் காரணம், நாம் அனைவரும் ருவீற்றருக்கு அடிமையாகிவிட்டதால் அதிலிருந்து வெளியேற வேண்டும். நான் இங்கே உலகத்திற்கு ஒரு நல்ல செயலைச் செய்கிறேன்” இவ்வாறு Elon Musk தெரிவித்திருப்பது பயனாளர்களுக்குப் பெரும் ஆச்சரியமளித்துள்ளது.
Twitter தளத்தை அணுகுவதில் பெரும் நெருக்கடி காணப்படுவதாக உலகெங்கும் இருந்து முறைப்பாடுகள் வெளிவந்த நிலையிலேயே இத் தகவலை அவர் வெளியிட்டிருக்கிறார்.
செயற்கை நுண்ணறிவு செயலிகளை (generative artificial intelligence models) உருவாக்குவதற்காகப் பயனாளர் தரவுகளை அணுகுவதில் சமூக ஊடகப் பெரு நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி எழுந்துள்ளது.
பயனாளர்களது பழக்கவழக்கங்களைச் சேகரித்து செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதற்காக மூன்றாவது தரப்பினர் (third-party companies) Twitter பயனாளர்களது தரவுகளைப் (data on user habits) பெருமெடுப்பில் அணுகுவதைத் தடுப்பதையே இந்த நடவடிக்கை உள் நோக்கமாகக் கொண்டது என்று சொல்லப்படுகிறது.