காசா முழுமையாக அழிக்கப்படும் – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால் காசா முழுமையாக அழிக்கப்படும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கட்ஸ் எச்சரித்துள்ளார்.
காசா நகரில் தீவிர தரைவழி தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தொடங்கிய நிலையில், அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
காசாவின் முக்கிய நகரமான காசா நகரில் இஸ்ரேல் இராணுவம் நேற்று முன்தினம் தரைவழி தாக்குதலை தொடங்கி உள்ளது.
கடந்த சில நாட்களாக காசா நகரில் உயரமான குடியிருப்பு கட்டிடங்களை தாக்கி அழித்த நிலையில், காசா நகரம் பாதுகாப்பற்ற பகுதியாக இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்தது.
இதனால் உடனடியாக அங்குள்ள மக்கள் தெற்கு பகுதியில் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களுக்கு செல்ல உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகள் உடைமைகளுடன் வாகனங்களிலும், நடந்தபடியும் நீண்ட வரிசையாக முகாம்களை நோக்கி செல்கின்றனர்.
ஏற்கனவே அந்த முகாம்களில் தங்க இடவசதி இல்லாததால் சிலர் காசா நகரத்திலேயே தொடர்ந்து தங்கி உள்ளனர். இந்த நிலையில், போர் விமானங்கள், டிரோன்கள், ஏவுகணைகள் மூலமாகவும் தரைவழியாகவும் காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.





