டெஸ்ட் கிரிக்கெட்டில் கவுதம் கம்பீருக்கு அனுபவமே கிடையாது.. தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை
இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் பயிற்சியளித்த அனுபவம் கிடையாது என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இதனை கவுதம் கம்பீரும் நன்கு அறிவார் என்று கூறியுள்ள அவர், சூழலுக்கு ஏற்ப முடிவுகளை சரியாக எடுக்கும் புத்திசாலித்தனம் கம்பீரிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது.
இதற்கான இந்திய அணி வீரர்களான விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக தயாராகியுள்ளனர்.
அதேபோல் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கால் பதிக்கிறார்.
இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கவுதம் கம்பீர், 9 சதங்கள், 22 அரைசதங்கள் உட்பட 4,154 ரன்களை விளாசி இருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை கம்பீரின் அனுபவம் குறைவானது தான். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மண்ணில் கம்பீரின் ஆட்டம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்துள்ளது.
அதேபோல் பயிற்சியாளராக டி20 லீக் கிரிக்கெட்டில் மட்டுமே கம்பீருக்கு அனுபவம் உள்ளது.
இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவுதம் கம்பீரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசுகையில், கவுதம் கம்பீர் ஆக்ரோஷமான மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
ஆனால் அது பெரும்பாலும் சொந்த அணி வீரர்களின் பாதுகாப்பிற்காக மட்டுமே வெளிப்படும். இதனால் இளம் வீரர்கள் கம்பீரின் பயிற்சியின் கீழ் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
அதேபோல் கவுதம் கம்பீரை நன்கு அறிவேன். அனைத்து விஷயங்களுக்காகவும் கோபப்படக் கூடியவர் அல்ல என்பதையும் சொல்ல முடியும்.
எந்த வீரரிடம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டுமோ, அவரிடம் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்துவார்.
அதுவும் கூட அந்த வீரரின் உச்சக்கட்ட திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக தான் இருக்கும். அதேபோல் ஏராளமான டி20 தொடர்களில் கம்பீர் விளையாடி இருக்கிறார்.
ஆனால் ஒரு பயிற்சியாளராக டெஸ்ட் கிரிக்கெட் தொடர் புதுமையாக இருக்கும்.
நிச்சயம் கம்பீர் மூளைக்குள் இந்த விஷயம் ஓடிக்கொண்டே இருக்கும். அதேபோல் நெருப்பாற்றில் நீந்தி பழகியவர் கம்பீர். அதனால் டெஸ்ட் போட்டிகளிலும் சூழலுக்கு ஏற்ப புத்திசாலித்தனமாக செயல்படும் திறன் கம்பீரிடம் நிறையவே உள்ளது.
பயிற்சியாளராக தொடக்க நிலையில் தான் கம்பீர் இருக்கிறார். அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இதுவரை அவர் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார்.
சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியை வங்கதேசம் அணி முழுமையான நம்பிக்கையுடன் தொடங்கும். அதேபோல் இந்திய அணிக்கும் புதிய வங்கதேசம் அணியை எதிர்த்து விளையாடுகிறோம் என்ற தெளிவு இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
ஆனால் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதல்ல.
பாகிஸ்தான் மண்ணில் அந்த அணியை வீழ்த்தியதை போல், இந்திய அணியை வீழ்த்துவது எளிதல்ல என்று தெரிவித்துள்ளார்.