கனடாவில் தமிழ் மக்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் – விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
கனடாவில் தெற்காசிய மக்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களின் செயற்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இவ்வாறான கும்பல்களை சமாளிப்பதற்காக கூடுதலாக 150 காவல்துறை அதிகாரிகள் தேவைப்படுவதாக சர்ரே (Surrey) மேயர் கூறியுள்ளார்.
எங்கள் சமூகம் இவ்வளவு ஆழமாகப் பாதிக்கப்படுவதைப் பார்ப்பது வேதனையளிக்கிறது. எங்களால் இனியும் இதை பொறுத்துக்கொள்ள முடியாது என மேயர் பிரெண்டா லோக் (Brenda Locke) நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
150 புதிய அதிகாரிகளை நியமிக்கும் கோரிக்கைக்கு இரு மட்ட அரசுகளும் பங்களிக்க வேண்டும் என்று கோரி, கூட்டாட்சி பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரிக்கு (Gary Anandasangaree) கடிதம் எழுதியதாகவும் மேயர் கூறுகிறார்.
குறிப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், நிதி குற்றம் மற்றும் துப்பாக்கி தடுப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்கள், நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான விதிகளை வலுப்படுத்த குற்றவியல் சட்டத்தை மாற்றுமாறு மத்திய நீதி மற்றும் குடிவரவு அமைச்சகங்களை அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
கனடாவில் பெரும்பாலான தமிழ் மக்கள் கடைகளை வைத்திருக்கின்றனர். இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்பில் 236-485-5149 என்ற எண்ணுக்கு அழைத்து முறையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண் வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





