வாஷிங்டன் சுந்தருக்கு தொடர்ச்சியாக ஆதரவு கொடுக்கும் கம்பீர்! சகோதரி நெகிழ்ச்சி

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஏன் ஆதரவு அளிக்கிறார் என்பது குறித்து அவரது சகோதரி ஷைலஜா சுந்தர், NDTV-யின் Tea, Toast and Sports Podcast-ல் பகிர்ந்து கொண்டார். கம்பீர், பல திறன்களைக் கொண்ட கிரிக்கெட் வீரர்களையும், எந்தப் பணியையும் ஏற்கத் தயாராக இருக்கும் வீரர்களையும் விரும்புவதாக அவர் கூறினார்.
இது குறித்து பேசிய “கவுதி பாய், வாஷி (வாஷிங்டன்) எந்த சூழலிலும் அழுத்தத்தைத் தாங்கி சிறப்பாக செயல்படும் திறனை விரும்புகிறார். இளம் வீரர்களை ஊக்குவித்து, அவர்களை உயர்ந்த மட்டத்தில் விளையாட வைப்பதற்கு கவுதி பாய் அளிக்கும் ஆதரவு அற்புதமானது,” என்று ஷைலஜா தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரில், வாஷிங்டன் சுந்தர் கம்பீரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தார். 4 டெஸ்ட் போட்டிகளில் 47.33 சராசரியுடன் 284 ரன்கள் குவித்த அவர், மான்செஸ்டரில் நடந்த டிரா ஆன டெஸ்ட் போட்டியில் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.
இந்திய அணியின் பேட்டிங்கை வலுப்படுத்த, குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டனை கம்பீர் தேர்ந்தெடுத்தார். “கவுதி பாய் அளித்த வாய்ப்புகளை வாஷி சிறப்பாகப் பயன்படுத்தி, தனது திறமையை நிரூபித்து வருகிறார். அவரது நம்பிக்கையை அவர் பலப்படுத்துகிறார்,” என்று ஷைலஜா பெருமையுடன் கூறினார்.எட்டு வயது மூத்தவரான ஷைலஜா, வாஷிங்டனை விட முன்பே கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்.
தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாடிய அவர், ஒரு காலத்தில் வாஷிங்டனுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடி, வலது-இடது கை கூட்டணியாக சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். “நாங்கள் ஒன்றாக தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடியது இப்போது அழகான நினைவுகளாக உள்ளன,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தற்போது ஒளிபரப்புத் துறையிலும் பணியாற்றி வரும் ஷைலஜா, வாஷிங்டனின் ஆரம்ப கால கிரிக்கெட் பயணத்தில் வழிகாட்டியாக இருந்தார்.“கவுதி பாய் மற்றும் வாஷியின் பிணைப்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். இருவரும் இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்க முயற்சிக்கின்றனர்,” என்று ஷைலஜா கூறினார்.