கர்நாடகாவில் மலையேற்றத்தின் போது காணாமல் போன பிரெஞ்சுக்காரர் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்பு
கர்நாடகாவிற்கு(Karnataka) சுற்றுலாப் பயணியாகச் சென்ற பிரெஞ்சுக்காரர்(France) ஒருவர் ஹம்பியில்(Hampi) உள்ள ஒரு மலையில் ஏற முயன்றபோது வழுக்கி விழுந்து காணாமல் போன இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற பாரம்பரியத் தலமான அஷ்டபுஜ ஸ்னானா(Ashtapuja Snana) மலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சுற்றுலாப் பயணி 52 வயதான புருனோ ரோஜர்(Bruno Roger) என அடையாளம் காணப்பட்டுளளார்.
வழுக்கி விழுந்த பிறகு புருனோ மலையின் பின்புறம் இரண்டு நாட்கள் வலியால் சிக்கித் தவித்துள்ளார்.
பின்னர் 52 வயதான அவரைக் கவனித்த உள்ளூர் விவசாயிகள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். காவல்துறை மற்றும் மாநில தொல்பொருள் துறை அதிகாரிகள் புருனோவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
புருனோவின் இடது காலிலும் முகத்தின் இடது பக்கத்திலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைக்குச் செல்லும் போது பிரெஞ்சு நாட்டவர் தான் சிக்கித் தவித்தபோது 1.5 லிட்டர் தண்ணீரில் உயிர் பிழைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.





