ஹிஜாப் அணிந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட பிரேஞ்சு பொலிஸார்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
பிரான்சில் கடந்த மாதம் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த கொடூரமான கத்திக்குத்து சம்பவத்துக்குப் பிறகு, நாடு தீவிர பயங்கரவாத எதிர்ப்பு எச்சரிக்கையில் இருக்கும் நிலையில், பாரிஸில் உள்ள ரயில் நிலையத்தில் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் ஒரு பெண்ணை பிரான்ஸ் பொலிஸார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று, பாரீஸ் ரயில் ஒன்றில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்துவிடுவதாக மிரட்டுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.உடனடியாக, ரயில் நிறுத்தப்பட, ஆயுதங்களுடன் குவிந்த பொலிஸார் பயணிகளை ரயில் நிலையத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்கள்.
அந்தப் பெண்ணை எச்சரித்தும் அவர் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும், அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டதாகவும் தெரிவித்த பொலிஸார், தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்துள்ளனர். பொலிஸார் துப்பாக்கியால் சுட்டதில், அந்தப் பெண் மீது ஒரு குண்டு பாய்ந்துள்ளது. ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது நிலைமை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை பொலிஸார் சோதனையிட்டபோது, அவரிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அவரிடம் அடையாள அட்டை எதுவும் இல்லை. ஆனால், இந்தப் பெண், 2021இல் இதேபோல் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதற்காக கைது செய்யப்பட்டு, தனது மன நல பிரச்சினைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதே பெண்ணாக இருக்கலாம் என பொலிஸார் கருதுகிறார்கள்.