இலங்கையில் தொலைப்பேசி மூலம் மேற்கொள்ளப்படும் மோசடி : பொலிஸார் எச்சரிக்கை!
உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பணம் மோசடி செய்த வழக்குகள் குறித்து புகார்கள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறான பல மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்க வங்கி கணக்கில் குறிப்பிட்டத் தொகையை வைப்பிலிடுமாறுக்கூறி போலி தொலைப்பேசி அழைப்புகளை ஏற்படுத்தி, அதன் மூலம் பணத்தை பெற்று மோசடி நடவடிக்கைளை செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறான அழைப்புகள் கடந்த சில நாட்களாக மாணவர்களின் பெற்றோருக்கு கிடைக்கப்பெற்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் குழந்தையொன்று பாடசாலையில் கல்வி கற்கும் போது விபத்துக்குள்ளாகி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக ஒன்றிரண்டு இலட்சம் தேவைப்படுகின்றது எனவும் போலியான தொலைப்பேசி அழைப்பினை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும், ஆகவே மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.