பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரியத் தலைவருக்கு எதிராக மூன்றாவது பிடியாணை பிறப்பித்த பிரான்ஸ்

2013ம் ஆண்டு நடந்த கொடிய இரசாயனத் தாக்குதல்கள் தொடர்பாக பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்துக்கு (Bashar al-Assad) எதிராக பிரான்ஸ் ஒரு புதிய சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளது.
சிரியாவின் நீண்டகால உள்நாட்டு மோதலின் போது மனிதகுலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீண்டகால சிரிய தலைவருக்கு எதிராக பிரெஞ்சு நீதித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த மூன்றாவது பிடியாணை இதுவாகும்.
இதற்கு முன்னதாக, 2012ம் ஆண்டு ஹோம்ஸில் (Homs) உள்ள ஒரு பத்திரிகை மையத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் பத்திரிகையாளர்கள் மேரி கோல்வின் (Marie Colvin, ரெமி ஓச்லிக் (Remy Ochlik) கொல்லப்பட்டனர். இதனால் முதல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, 2017ம் ஆண்டு டெராவில் (Deraa) உள்ள ஒரு பொதுமக்கள் பகுதியில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக இரண்டாவது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
சிரியாவை கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆட்சி செய்த அசாத், 1963 முதல் ஆட்சி செய்து வந்த பாத் கட்சி ஆட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து கடந்த டிசம்பரில் ரஷ்யாவிற்கு தப்பிச் சென்றார்.
இதனால் ஜனவரி மாதம் ஜனாதிபதி அஹ்மத் ஷராவின் (Ahmed Shara) கீழ் ஒரு இடைக்கால நிர்வாகம் நிறுவப்பட்டது.