நேபாளத்தின் இடைக்கால பிரதமராக பெறுப்பேற்றவுள்ள முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா

அமைதி திரும்பியுள்ள நேப்பாளத்தின் இடைக்காலப் பிரதமாக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி பொறுப்பேற்பார் என்று இளையர் குழு இன்று (செப்டம்பர் 11) அறிவித்தது. ஆறு மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
“பழைய தலைவர்களின் செயல்பாட்டால் சலிப்படைந்த பின்னரே இந்த இயக்கத்தை நாங்கள் முன்னெடுத்தோம். அமைதியான முறையில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் அரசியல் தொண்டர்கள் கலவரத்தை ஏற்படுத்தி, சேதங்களை ஏற்படுத்தினர். இணையக் கணக்கெடுப்புகளின் மூலம், இளையர்கள் சுஷிலா கார்க்கிக்கு வாக்களித்தனர். அரசியலமைப்பை மாற்ற நாங்கள் முயற்சிக்கவில்லை, ஆனால் அதில் தேவையான மாற்றங்களைச் செய்கிறோம்,” என்று இளையர் குழுவின் தலைவர் அனில் பனியா கூறினார்.
நாட்டின் நலன் கருதி இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த இளைஞர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக சுஷிலா கார்க்கி கூறினார்.
“நேப்பாளத்தில் கடந்த காலத்திலிருந்தே பிரச்சினைகள் இருந்து வருகின்றன. இப்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நேப்பாளத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம், நாட்டிற்கு ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்போம்,” என்றார் அவர்.
“கொல்லப்பட்ட இளைஞர்களை கவுரவித்து, நேப்பாளத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் உறுதியோடு உள்ளேன்,” என்று சுஷிலா கார்கி கூறினார்.
உத்திரப்பிரதேசம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற சுஷிலா, இந்தியப் பிரதமர் மோடி மீது நன்மதிப்பு உள்ளதாகவும் இந்தியாவுடன் நேப்பாளத்தின் உறவு வலுப்படும் என்றும் சொன்னார்.