பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோவுக்கு அறுவை சிகிச்சை நிறைவு
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பிரேசிலின்(Brazil) முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு(Jair Bolsonaro) அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
70 வயதான முன்னாள் தலைவருக்கு பிரேசிலியாவில் உள்ள டிஎப் ஸ்டார்(DF Star) மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
“வெற்றிகரமான அறுவை சிகிச்சை சிக்கல்கள் இல்லாமல் முடிந்தது. இப்போது அவர் மயக்க மருந்திலிருந்து எழுந்திருக்கும் வரை நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று அவரது மனைவி மிஷேல்(Michelle) ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
போல்சனாரோ ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்காக நவம்பர் முதல் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
காவல்துறை மருத்துவர்கள் ஜெய்ர் போல்சனாரோவிற்கு அறுவை சிகிச்சை தேவை என்பதை உறுதிப்படுத்தியதை அடுத்து பிரேசிலிய உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரஸ்(Alexandre de Moraes) கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தார்.
மேலும், ஜெய்ர் போல்சனாரோவிற்கு குடலிறக்கம் காரணமாக இரண்டு இடுப்பு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு வலியை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.




