மூளை நோய்களை ஏற்படுத்தும் காட்டுத் தீ!
காடுகளில் ஏற்படும் தீ இயற்கையான காற்று மாசுபாடு ஆகும். மாறிவரும் பருவ நிலைகளால் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீ, அதிக அளவு துகள்களை காற்றில் வெளியிடுகிறது. இதில் சல்பேட்டுகள், கார்பன், நைட்ரேட்டுகள் மற்றும் பிற கனிம சேர்மங்கள் அடங்கும்.
2.5 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான விட்டம் கொண்ட துகள்கள் (PM2.5) மிகவும் ஆபத்தானது.
அவை ஒரு மனித முடியின் விட்டத்தை விட 30 மடங்கு சிறியவை. எனவே, இவற்றை சுவாசிக்கும்போது நுரையீரல் திசுக்களிலும் மூளையிலும் எளிதில் படிந்துவிடும்.
இந்நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் 27,857 பேரிடம் ஆய்வு நடத்தியது. இதில், துகள்களால் காற்று மாசு அதிகம் உள்ள பகுதிகளில் வசித்த பலருக்கு மூளை தொடர்பான ‘டிமென்ஷியா’ நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
‘டிமென்ஷியா’ என்பது நமது அன்றாட செயல்பாடுகளை பாதிக்கும் மூளை தொடர்பான பல்வேறு நோய்களுக்கான பொதுவான சொல். மிகவும் பொதுவான ‘டிமென்ஷியா’ நோய் ‘அல்சைமர்’ ஆகும்.