சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் மரணம் – உடலை சொந்த நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேற்கூரையில் இருந்து தவறி விழுந்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. துவாஸில் உள்ள ஒரு வேலையிடத்தில் சோலார் பேனல்களை நிறுவிக் கொண்டிருந்த கட்டுமான ஊழியர் மேற்கூரையிலிருந்து தவறி விழுந்து ஏற்பட்ட படுகாயங்களால் இறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
36 வயதான பங்களாதேஷ் நாட்டவரான அவர், சூரிய வெளிச்சம் உள்ளே வர ஸ்கைலைட் சன்னலை பொருத்திக்கொண்டிருக்கும் போது 10 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்தார் என மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.
இது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.35 மணிக்கு உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அதன் பின்னர் அவர், 12 துவாஸ் சவுத் ஸ்ட்ரீட் 2 லிருந்து தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட கடும் காயங்கள் காரணமாக அங்கு அவர் இறந்தார் என குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், ஊழியரின் உடலை பங்களாதேஷில் உள்ள அவரது குடும்பத்திற்கு அனுப்ப அந்நிறுவனம் ஏற்பாடு செய்து வருவதாக புலம்பெயர்ந்த ஊழியர் நிலையம் கூறியது.