வெளிநாட்டு நேரடி முதலீடு 26 சதவீதமாக அதிகரிக்கும்
2024-2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீடு 26 சதவீதமாக அதிகரித்து 42.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், இந்தியா ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதன் ஊடாக குறிப்பிடத்தக்க பொருளாதார மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில் இவ்வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு 26 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாக அமைவதோடு பொருளாதார நிலைமையை வலுப்படுத்தவும் செய்யும்.
உலகளவில் ஒரு முக்கிய முதலீட்டு இடமாக இந்தியாவை குறிப்பிடத்தக்களவில் இந்நிலைமை மேம்படுத்தும்.
வெளிநாட்டு நேரடி முதலீட்டில் ஏற்பட்டுவரும் முன்னேற்றத்திற்கு நாட்டில் நிலவும் கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்புகள் சிறந்த சான்றுகளாக அமைந்துள்ளன.
குறிப்பாக வளர்ந்துவரும் வர்த்தக சூழலும், வலுவான கொள்கைக் கட்டமைப்பும் சிறந்த சர்வதேச போட்டித்தன்மையும் சிறப்பான பிரதிபலிப்புக்களை வெளிப்படுத்தியுள்ளன.
உட்கட்டமைப்பு மேம்பாட்டில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள், புதிய தொழில் வாய்ப்புக்களின் உருவாக்கம், தொழில்நுட்ப பரிமாற்ற ஊக்குவிப்பு என்பன இந்தியாவின் வளர்ச்சிக்கு உந்துதல் அளிப்பதற்கு வெளிநாட்டு நேரடி முதலீடு முக்கிய பங்காற்றியுள்ளது.
தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற துறைகளின் வளர்ச்சியால் புதுமை சுற்றுச்சூழல் அமைப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.
இவை வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்கும் முக்கிய துறைகளாக மாறியுள்ளன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.