பொதுஜன பெரமுன, ஐ.தே.க கூச்சல் குறித்து பொன்சேகா அதிருப்தி
” மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிபீடமேறுவதற்கு இடமளிக்க கூடாது. இந்நாட்டை நாசமாக்கிய தரப்புகள் இணைந்து நடத்தும் நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்குமளவுக்கு நான் முட்டாள் அல்லன்.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீலட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட மேலும் சில கட்சிகள் இணைந்து நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.
” எதிரணி தரப்பில் உள்ள கட்சிகளின் அரசியல் நடவடிக்கையானது நாடு மற்றும் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அமையவில்லை. அதனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அந்த முகாமில் இருந்து வெளியேறிவிட்டேன்.
எனவே, மீண்டும் எதிரணி கூட்டணிக்குள் செல்லும் அளவுக்கு நான் முட்டாள் கிடையாது. எதிரணி தரப்பில் உள்ளவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என பிரார்த்திக்கின்றேன்.
நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் மீண்டும் ஆணை வழங்கக்கூடாது.” எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
அதேவேளை, தமது தரப்பிலுள்ள குறைகளை ஆளுங்கட்சியும் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையேல் மக்கள் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் எனவும் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.





