அமெரிக்காவில் 173 பேருடன் சென்ற விமானத்தில் தீ! பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பயணிகள்

அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தில் இருந்து மியாமி நோக்கி புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் டயரில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக அவசர வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
விமானத்தில் 173 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இருந்தனர். அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீவிபத்து, லேன்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், சம்பவத்துக்குப் பின்னர் விமானம் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், விமானப் பணிக் குழுவின் சீரான செயலுக்காக பாராட்டு தெரிவித்ததாகவும் கூறியுள்ளது. பயணிகளின் அனுபவத்துக்கு வருந்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துக்கான விடியோவில், புகை சூழ்ந்த விமானத்தில் இருந்து பயணிகள் அவசர வெளியேற்றம் வழியாக ஒழுங்காக வெளியேற்றப்படுவது பதிவாகியுள்ளது.